Pages

நீங்கள் செய்யும் செயல்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் திதிகள்

நீங்கள் செய்யும் செயல்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் திதி இதுதான் !!
  திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். மொத்தம் முப்பது திதிகள் உள்ளன. அமாவாசையை அடுத்து சதுர்தசி வரையிலான 15 திதிகள் வளர்பிறை (சுக்லபட்சம்) காலமாகும். பௌர்ணமியை அடுத்து சதுர்தசி வரையிலான 15 திதிகள் தேய்பிறை காலமாகும் (கிருஷ்ண பட்சம்). இதில் சில திதிகளைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

பிரதமை :

இந்த திதிக்கு அதிதேவதை அக்னி. வாஸ்து காரியங்கள் செய்வதற்கும், திருமணம் செய்வதற்கும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் உகந்ததாகும்.

பிரதமை நாளன்று அக்னி சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபடலாம் மற்றும் மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம்.

துவிதியை :

இந்த திதிக்கு அதிதேவதை பிரம்மன். துவிதியை திதியில் அரசு காரியங்களை ஆரம்பிக்கலாம். கட்டிடம் கட்டுவதற்கான அஸ்திவாரம் போடலாம்.

மேலும், திருமணம் செய்யலாம். ஆடை, அணிகலன்களை அணியலாம். விரதம் இருக்கலாம்.

திருதியை :

இந்த திதிக்கு அதிதேவதை கௌரி (பராசக்தி). இந்த திதியில் சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம். குழந்தைக்கு முதன்முதலாக அன்னம் ஊட்டலாம்.

அழகுக் கலையில் ஈடுபடலாம். சீமந்தம் செய்யலாம். சிற்ப காரியங்களில் ஈடுபடலாம். சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது.

சதுர்த்தி :

இந்த திதிக்கு அதிதேவதை எமன் மற்றும் விநாயகர். இந்த சதுர்த்தி திதியை முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த நாளாக தேர்ந்தெடுப்பார்கள். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், அக்னிப் பயன்பாடு (நெருப்பு சம்பந்தமான காரியங்களை) செய்ய உகந்த திதி இது.

மேலும், ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், இந்த திதி நாளில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும்.

பஞ்சமி :

நாக தேவதைகள் இந்த திதிக்கு அதிதேவதை ஆவார்கள். பஞ்சமி திதியில் எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாக கருதப்படுகிறது.

இந்த திதியில் மருந்து உட்கொள்ளலாம். ஆபரேஷன் செய்து கொள்ளலாம். மேலும், நாகர் வழிபாட்டுக்கு உகந்த திதி இது. எனவே, நாக தோஷம் உள்ளவர்கள் இந்த திதியில் நாகத்தை பிரதிஷ்டை செய்து வழிபட நாக தோஷம் விலகும். பஞ்சமியில் நாக பஞ்சமி விசேஷமானது.

சஷ்டி :

இந்த திதிக்கு அதிதேவதை முருகப்பெருமான். எனவே ஆறுமுகம் கொண்ட முருகனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும்.

சஷ்டி திதியில் புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம். சிற்ப, வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம். ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம்.

மேலும், புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். அதுமட்டுமின்றி முருகனை சஷ்டி விரதம் இருந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு சகல நலன்களும் உண்டாகும்.

சப்தமி :

இந்த திதியின் அதிதேவதை சூரியன். சப்தமி திதியில் சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம். ஆடை, அணிகலன்களை தயாரிக்கலாம். இது பயணம் மேற்கொள்ள உகந்த திதியாகும்.

மேலும், இந்த திதியில் வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்யலாம். இந்த தினத்தில், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.